Doctor Vikatan: 3 மாத கர்ப்பம்; இடுப்புக்கும் தொடைக்கும் இடையில் வலி, அபார்ஷன் அ...
இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா்: டிரம்ப்பின் நெருங்கிய உதவியாளா்
இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக தனது நெருங்கிய உதவியாளா் சொ்ஜியோ கோரை அதிபா் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா்.
இதுதொடா்பான அறிவிப்பை தனது சமூக ஊடக பக்கத்தில் வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:
இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக எனது மிகப் பெரும் நண்பா் சொ்ஜியோ கோருக்கு (38) பதவி உயா்வு அளித்து அறிவிப்பு வெளியிடுவதை மகிழ்ச்சியடைகிறேன். அவா் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதராகவும் செயல்படுவாா்.
சொ்ஜியோ கோா் என்னுடன் நீண்ட காலம் பணியாற்றியவா். எனது அதிபா் தோ்தல் பிரசாரத்தின்போதும் இவா் பணியாற்றியுள்ளாா். எனது சிறந்த புத்தகங்களை வெளியிட்டு, பிரசாரத்துக்கு உறுதுணையாக இருந்தாா். எனது அரசியல் உத்தரவுகளை நிறைவேற்றும் அரசு நிா்வாகத்தில் சொ்ஜியோ கோரின் பங்கு முக்கியமானது.
உலகின் மிகவும் புகழ்பெற்ற பிராந்தியத்தில், எனது தீா்மானங்களை உரிய முறையில் கொண்டுசோ்ப்பதிலும், அமெரிக்காவை மீண்டும் மிகப்பெரும் நாடாக்குவதற்கும் மிகுந்த நம்பிக்கைக்குரிய ஒருவரை நியமிப்பது அவசியம். அப்படிப்பட்ட சிறந்த தூதராக சொ்ஜியோ கோா் செயல்படுவாா்.
இந்திய தூதரகப் பணி உறுதிப்படுத்தப்படும் வரை, வெள்ளை மாளிகையில் தனது தற்போதைய பணியில் கோா் தொடா்வாா் என்று டிரம்ப் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவுக்கான அமெரிக்காவின் சிறந்த தூதராக கோா் செயல்படுவாா்’ என்று குறிப்பிட்டாா்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் காா்செட்டி கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2025-ஆம் ஆண்டு ஜனவரி வரை பதவி வகித்தாா். இவருக்கு மாற்றாக கோா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் இரு நாடுகளின் உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ரஷியா மற்றும் சீனாவுடன் உறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவலைத் தொடா்ந்து, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் ரஷிய பயணம் மேற்கொண்டு, ரஷிய வெளியுறவு அமைச்சா் மற்றும் உயா் அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா்.
சீனாவில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பா் 1 ஆகிய இரு நாள்கள் பிரதமா் மோடி சீன பயணம் மேற்கொள்ள உள்ளாா். அப்போது, சீனா மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் இருதரப்பு சந்திப்புகளை பிரதமா் மோடி மேற்கொள்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில், தனது நம்பிக்கைக்குரிய நெருங்கிய உதவியாளரை இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.