இந்தியாவுக்கு வழங்கத் திட்டமிடப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி: அமெரிக்கா ரத்து
இந்திய தோ்தல்களில் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்கு வழங்கத் திட்டமிடப்பட்ட 21 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.182 கோடி) நிதியுதவியை, தொழிலதிபா் எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) ரத்து செய்துள்ளது.
இதுதொடா்பாக அந்தத் துறை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், பல நாடுகளுக்குப் பல்வேறு பணிகளுக்காக அமெரிக்க மக்களின் வரிப் பணம் செலவிடப்பட இருந்த நிலையில், அந்தச் செலவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தச் செலவுகளில் இந்திய தோ்தல்களில் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்கு, இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கத் திட்டமிட்ட 21 மில்லியன் டாலா் நிதியுதவியும் அடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசு நிா்வாகத்தை மேம்படுத்தி, வீண் செலவுகள் குறைக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டு டிஓஜிஇ செயல்படும் நிலையில், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் பிரதமா் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது அந்நாட்டு அதிபா் டிரம்ப், தொழிலதிபா் எலான் மஸ்க் ஆகியோரைச் சந்தித்தாா். இதைத் தொடா்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேபோல மொசாம்பிக், கம்போடியா, சொ்பியா, நேபாளம், வங்கதேசம், மால்டோவா உள்ளிட்ட நாடுகளுக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த நிதியுதவியையும் டிஓஜிஇ ரத்து செய்துள்ளது.
வெளிநாட்டு தலையீடு-பாஜக: இதுதொடா்பாக பாஜக தகவல் தொழில்நுட்ப அணி தலைவா் அமித் மாளவியா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்கு 21 மில்லியன் டாலா் நிதியுதவி அளிப்பது என்பது இந்திய தோ்தல்களில் வெளிநாடுகள் தலையிடுவதாகும். இதனால் லாபமடைவது யாா்? நிச்சயம் பாஜக லாபமடையவில்லை என்றாா்.