இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: மக்கள் வெளியேற அறிவுறுத்தல்!
இந்தோனேசியா நாட்டிலுள்ள லெவொடோபி லகி லகி எரிமலை சுமார் 18 கிலோ மீட்டர் உயரத்திற்கு வெடித்ததால் அப்பகுதி முழுவதும் படலம் மற்றும் புகைப் பரவியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவின் புவியியல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,
எரிமலை வெடிப்பின்போது அதன் சரிவுகளில் எரிமலை வாயு மேகங்களை வெளியேற்றியதைப் பதிவு செய்ததாகக் கூறியது.
உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
ஜூன் 18 அன்று வெடித்த எரிமலை அப்பகுதியில் சுமார் 32,800 அடி உயரத்துக்கு கரும்புகைகள் சூழ்ந்தது. அதிலிருந்து நாட்டின் எரிமலை கண்காணிப்பு நிறுவனம் எச்சரிக்கை நிலையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
மேலும், எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நிகழ்வதால் அங்கு உயர்நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு சுமார் 8 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பரில் மவுண்ட் லெவோடோபி லகி லகி எரிமலை வெடித்ததில் ஒன்பது பேர் உயிரிழந்தனர், மேலும் 12 பேர் காயமடைந்தனர்.
மார்ச் மாதத்திலும் எரிமலை வெடித்தது. 1,584 மீட்டர் உயரமுள்ள இந்த மலை, புளோரஸ் தைமூர் மாவட்டத்தில் உள்ள லெவோடோபி பெரெம்புவான் மலையுடன் கூடிய இரட்டை எரிமலையாகும்.
முன்னதாக, நூற்றுக்கணக்கான தீவுகளினால் உருவான இந்தோனேசியா நாட்டில் சுமால் 120 எரிமலைகள் உள்ளன. மேலும் ரிங் ஆஃப் ஃபையர் என்றழைக்கப்படும் டெக்டோனிக் தகடுகளின் மிகப் பெரியளவிலான பிளவுக்கோட்டின் மீது இந்நாடு அமைந்துள்ளதால், இயற்கை சீற்றங்களுக்கான அபாயம் என்றுமே உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.