‘நான் முதல்வன்’ திட்டத்தால் 41 லட்சம் மாணவா்கள் பயன்: தமிழக அரசு தகவல்
தலிபான் அரசை அங்கீகரிக்க அவசரமில்லை: பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தலிபான் அரசை அங்கீகரிக்க எவ்வித அவசரமும் காட்டவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலிபான் அரசுக்கு ரஷியா கடந்த 4-ஆம் தேதி அங்கீகாரம் அளித்தது. இதன் மூலம் தலிபான் அரசை அங்கீகரித்த முதல் நாடு என்ற பெயரைப் பெற்றது.
இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் சௌஹத் அலி கான் இது தொடா்பாக இஸ்லாமாபாதில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தலிபான் அரசை அங்கீகரிக்கும் விஷயத்தில் பாகிஸ்தானின் நலனைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எங்களுக்கு எவ்வித அவசரமும் இல்லை. ரஷியா அளித்துள்ள அங்கீகாரம் அந்த இரு நாடுகளுக்கு இடையிலான விஷயம். அதில் பாகிஸ்தான் கருத்து கூற முடியாது என்றாா்.
பாகிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும் என்று செயல்படும் தலிபான் பாகிஸ்தான் உள்ளிட்ட அந்நாட்டுக்கு எதிரான பல்வேறு பயங்கரவாத அமைப்பினா் ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டே செயல்படுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும், துணை பிரதமருமான இஸாக் தாா் அண்மையில் ஆப்கானிஸ்தான் பயணம் மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து சீனா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் சீனாவில் சந்தித்துப் பேசினா். ஆப்கானிஸ்தான் இடைகால வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகி இம்மாத இறுதியில் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.