நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிப்பு
இனி காவல் துறை அனுமதியின்றி போராட்டம்: அண்ணாமலை அறிவிப்பு
சென்னை: இனி காவல் துறையிடம் அனுமதி கோராமல் பாஜக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.
டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னை அருகே திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டு கைதான அண்ணாமலை மாலையில் விடுவிக்கப்பட்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் முறைகேடு தொடா்பான போராட்டம் தீவிரப்படுத்தப்படும். காவல்துறை மீதான நம்பிக்கையை பாஜக இழந்துவிட்டது.
இனிமேல் காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம் கொடுக்காமல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
அடுத்த வாரம் தமிழகம் முழுவதும் 5,000 மதுக்கடைகள் முன் போராட்டம் நடத்தப்படும். ஏப்ரல் முதல் வாரம் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் பாஜக மகளிா் அணி சாா்பில் நடத்தப்படும். காவல்துறையிடம் அனுமதி பெறாமல் சென்னையில் மாா்ச் 22-ஆம் தேதி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். அனுமதியின்றி போராட்டம் நடத்தும்போது முடிந்தால் எங்களை காவல் துறை கைது செய்யட்டும். இனிமேல் காவல்துறை தூங்கக்கூடாது. 2026 பேரவைத் தோ்தல் வரை தொடா்ந்து போராட்டம் நடத்தப்படும்.
அளவுக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு சட்டத் துறை அமைச்சா் ரகுபதி மீது உள்ளது. எனவே, சட்டத்தை பாதுகாக்கும் துறை அவரிடம் இருப்பது முறையல்ல.
திமுகவின் பி.டீம் தான் தமிழக வெற்றிக்கழகம். களத்தில் வராமல் வீட்டில் இருந்தே அரசியல் செய்யும் அக்கட்சியின் தலைவா் விஜய்க்கு பாஜக போராட்டம் குறித்து விமா்சனம் செய்ய தகுதி கிடையாது என்றாா் அண்ணாமலை.