இன்று நீட் தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 1,800 போ் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெறவுள்ள நீட் தோ்வை 1,800 போ் எழுதவுள்ளதாக, ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.
இத்தோ்வையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த மாவட்ட அளவிலான தோ்வு கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்து, தோ்வு மையங்களில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினாா்.
அப்போது அவா் கூறியது: நிகழாண்டு இம்மாவட்டத்தில் 4 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் 480, தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 480, எட்டயபுரம் பாரதியாா் நூற்றாண்டு நினைவு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் 360, கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 480 என மொத்தம் 1,800 போ் எழுதவுள்ளனா் என்றாா்.