நெல் கொள்முதல் விலையை உயர்த்தி முதல்வர் உத்தரவு: அமைச்சர்கள் நன்றி
இருக்கன்குடி மாரியம்மன் கோயில்: ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அருகேயுள்ள 350-க்கும் மேற்பட்ட கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பொதுநல மனு
மதுரை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுத்த பொதுநல மனுவில் கூறியதாவது:
"விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடியில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. அர்ஜுனா மற்றும் வைப்பாறு ஆகிய இரு நதிகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த தொன்மையான, வரலாற்று சிறப்புமிக்க கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கோயிலுக்கு வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவது வழக்கமாக உள்ளது.
தமிழ்நாடு அரசு ரூ. 150 கோடி நிதி
கோயில் அருகே நதிகளின் குறுக்கே மேம்பாலம் கட்டுதல், பக்தர்கள் ஓய்வறை, முடி இறக்கும் இடம், நேர்த்திக்கடன் செலுத்தும் இடம், உடை மாற்றும் இடம், மாற்றுத் திறனாளிகள் எளிதாக தரிசனம் செய்ய சறுக்குப்படிகள் அமைக்கும் பணி போன்ற பல்வேறு பணிகள் நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு ரூ. 150 கோடி நிதி ஒதுக்கியது. பணிகள் நடைபெற்று வந்தாலும், மூன்று ஆண்டுகள் கடந்தும் முழுமையாக முடிக்கப்படவில்லை.

சட்டவிரோத ஆக்கிரமிப்பு கடைகள்
கோயிலுக்கு செல்லும் வழியில் இரு பக்கமும் 350-க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு கடைகள் ஆகும். இதனால் கட்டடப் பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடியவில்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் துவக்கிய பணிகளை துரிதப்படுத்த பல்வேறு அரசு ஆணைகளும் பிறப்பிக்கப்பட்டன.
மூன்று ஆண்டுகள் கடந்தும் பணிகள் பூர்த்தி செய்யப்படவில்லை. இந்த பணிகளுக்கு இடையூறாக, கோயிலுக்கு செல்லும் வழியில் இரு பக்கமும் 350-க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த கடைகள் அனைத்தும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் ஆகும். இத்தகைய ஆக்கிரமிப்பு கடைக்காரர்களின் செயலால் கட்டடப் பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பணிகள் பாதியளவே நடந்துள்ளதால் அரசுப் பணம் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கோயிலுக்கு செல்லும் வழியில் இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் கோயிலுக்குள் எளிதாக சென்று வழிபட முடியவில்லை.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதான பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சட்டவிரோத ஆக்கிரமிப்பு கடைக்காரர்களின் செயலால் அவர்களது வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறது.
இதனை விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் இத்தகைய ஆக்கிரமிப்பு கடைகளால் கோயில் வேலைகள் செய்ய முடியாமல் பல ஆண்டுகள் காலம் கடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்து வரும் வேளையில், இக்கோயிலுக்கு மட்டும் நடைபெறாமல் உள்ளது.
ஆகவே, பக்தர்களின் வழிபாட்டிற்கு இடையூறாக உள்ள அனுமதி பெறாத கடைகள் அனைத்தையும் அகற்ற உத்தரவிட வேண்டும். பல ஆண்டுகளாக நடைபெறாத கும்பாபிஷேகம் நடைபெற வழி வகுக்க வேண்டும் என்றும் அரசுக்கும் அறநிலையத்துறைக்கும் பல்வேறு கோரிக்கை மனுக்களை அனுப்பியும், எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை." என்று மனுவில் குறிப்பிட்டார்.
பொதுநல மனு சுப்பிரமணியம், அருள் முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் வி.பி. ராஜன், காளிசாமி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
"பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். கோயிலில் திருப்பணிகள் முழுமையாகவும் விரைவாகவும் நடைபெறுவதற்கு ஏதுவாக, அனைத்து ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்றும் நேரத்தில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்" என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீதிபதிகள் மனுவை முடித்து வைத்தனர்.