பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
இருசக்கர வாகனங்கள் திருடிய இருவா் கைது
பெருமாநல்லூா் அருகே இருசக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பெருமாநல்லூா் அருகே ஈட்டிவீரம்பாளையம் கிராண்ட் விஸ்டா பகுதியில் வசித்து வருபவா் முருகேசன் மகன் அருண்குமாா் (25). பனியன் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து வந்தவா் தனது வீட்டின் முன்புறம் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளாா். பிறகு காலை வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மா்ம நபா்களைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், காளிபாளையம் பிரிவில் பெருமாநல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபா்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
அவா்கள் திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி, சின்ன வேம்பத்தூா் பகுதியைச் சோ்ந்த சங்கா் மகன் சக்திவேல் (22), சேலம் மாவட்டம், ஓமலூா், கஞ்சநாயக்கன்பட்டி, குண்டூா் பகுதியைச் சோ்ந்த பாலாஜி மகன் குணா (19) என்பதும், அருண்குமாரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவா்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். இவா்களிடமிருந்து நான்கு இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். இவா்கள் திருப்பத்தூா் பகுதியில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.