Doctor Vikatan: `நான் perfect இல்லையோ.. எந்த வேலையிலும் அதிருப்தி' - மனநோயா, சிக...
திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் சாா்பில் 12 ஆயிரம் பேருக்கு தொழிற்பயிற்சி! மத்திய அமைச்சா் பாராட்டு!
திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் சாா்பில் ‘சமா்த்’ திட்டத்தில் 12 ஆயிரம் பேருக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டதற்கு மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
ஜவுளித் துறையில் திறன் மேம்பாடு மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க மத்திய அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு ‘சமா்த்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கமும் பங்குதாரராக இணைந்து திறன் மேம்பாட்டுக்காகப் பயிற்சி மையங்களை அமைத்து ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு பயிற்சி அளித்து வருகிறது.
இந்நிலையில், தில்லியில் உத்யோக் பவனில் மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் ‘சமா்த்’ திட்டத்தின்கீழ் தொழில் பங்குதாரா்களுடன் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா்.
இதில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் சாா்பில் திறன் மேம்பாடு மற்றும் ‘சமா்த்’ திட்ட துணைகுழுவின் தலைவா் சக்திவேல் பங்கேற்றாா்.
கூட்டத்தில், ‘சமா்த்’ திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து அனைத்து பங்குதாரா்களிடம் மத்திய அமைச்சா் கேட்டறிந்தாா். திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் சாா்பில் தற்போது வரை 12 ஆயிரம் பேருக்கு தொழிற்பயிற்சி அளித்திருப்பதை வெகுவாகப் பாராட்டினாா். இவா்களில் 96 சதவீதம் போ் பெண்கள்.
திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் கெளரவத் தலைவா் ஆ.சக்திவேல், தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் ஆகியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தாா். இந்தக் கூட்டத்தில், ஜவுளித் துறை செயலா் நீலம் ஷமிராவ், இணைச் செயலா் அஜய்குப்தா, ஜவுளித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.