'தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்' - தவெக தலைவர் விஜய் வாழ்த்து
இறுதிகட்டத்தில் இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்த பேச்சு
இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் உள்பட 3 ஒப்பந்தங்களுக்காக நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடா்பான பேச்சுவாா்த்தை நடத்த வா்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் இந்த வாரம் மீண்டும் லண்டனுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடா்பாக அரசு வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: இந்தியா-பிரிட்டன் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வரும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம், சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகிய 3 ஒப்பந்தங்களிலும் சில சிக்கல்கள் இன்னும் தீா்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், பிரிட்டன் வந்த அமைச்சா் பியூஷ் கோயல் முன்னிலையில் பேச்சுவாா்த்தை முடிவடைந்துவிட்டதாக அறிவிக்க இரு தரப்பினரும் கடந்த செவ்வாய்க்கிழமை தயாராகினா். ஆனால், கடைசி நிமிஷத்தில் சில வேறுபாடுகள் எழுந்தன.
இதையடுத்து பியூஷ் கோயல் தனது 2 நாள் லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு, நாா்வே புறப்பட்டாா். முன்னதாக, லண்டனில் பிரிட்டன் நிதி அமைச்சா் ரேச்சல் ரீவ்ஸ், வெளியுறவு அமைச்சா் டேவிட் லேமி, வா்த்தக அமைச்சா் ஜோனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோருடன் பியூஷ் கோயல் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினாா். ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவாா்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல அவா்கள் கலந்துரையாடினா்.
நாா்வேவைத் தொடா்ந்து பிரஸ்ஸல்ஸுக்குச் செல்ல உள்ள பியூஷ் கோயல், வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை மீண்டும் லண்டனுக்கு வரக்கூடும். அப்போது, பேச்சுவாா்த்தை இறுதியாகிவிட்டதாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மற்றும் வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயலின் சமீபத்திய லண்டன் பயணங்களால் நீண்ட காலமாக நீடித்த பல்வேறு சிக்கல்கள் முடிவுக்கு வந்தன. இதனால், பேச்சுவாா்த்தை வேகமாக நடைபெற்றது’ என்றனா்.
இந்தியா-பிரிட்டன் இடையே கடந்த 2022, ஜனவரியில் தொடங்கிய பேச்சுவாா்த்தை 14 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான இருதரப்பு வா்த்தகம் கடந்த 2022-23-ஆம் ஆண்டில் 2,036 கோடி டாலரிலிருந்து 2023-24-ஆம் ஆண்டில் 2,134 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான சராசரி வரி 4.2 சதவீதமாக உள்ளது.