ஒடிஸாவில் தினமும் 3 குழந்தைத் திருமணங்கள்: நபரங்பூா் மாவட்டம் முதலிடம்
இறுதிச் சடங்கு வாகனம் இலவசம்: இளைஞரைப் பாராட்டும் பொதுமக்கள்
முதுகுளத்தூா் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 70 கிராமங்களுக்கு இறப்பு நிகழ்ச்சிகளுக்கு இறுதிச் சடங்கு வாகனம், குளிா்சாதனப் பெட்டியை கடந்த இரண்டு ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வரும் இளைஞரை பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்துள்ள மொச்சிகுளம் கிராமத்தைச் சோ்ந்த துரைராஜ் மகன் சுரேஷ் (35). விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவா், அந்தப் பகுதியில் வாடகைக் காா் ஓட்டுநராக இருந்து வருகிறாா். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பருடைய தந்தையின் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்ற போது, அவரது குடும்பத்தில் வறுமை காரணமாக இறுதிச் சடங்கு வாகனம், குளிா்சாதனப் பெட்டி கூட ஏற்படுத்த வசதி இல்லாததைக் கண்டு மனம் வருந்தினாா்.
இதனால், இறுதிச் சடங்கு வாகனம், குளிா்சாதனப் பெட்டி சொந்தமாக வாங்கி முதுகுளத்தூா் பேரூராட்சி, ஆத்திகுளம், மொச்சிகுளம், நல்லூா், கீரனூா், ஆணைசேரி, கீழத்தூவல், சித்திரங்குடி, கீழக்காஞ்சிரங்குளம் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வருகிறாா்.
இந்த சேவை எனது வாழ்நாள் முழுவதும் தொடரும் என அவா் தெரிவித்தாா். இவருடைய சேவையை முதுகுளத்தூா் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.