இலக்கியம்பட்டியில் வராகி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா
இலக்கியம்பட்டியில் வராகி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இலக்கியம்பட்டி, அழகாபுரியில் 21 அடி உயர ஸ்ரீ சிம்மஹாரூட வராகி அம்மன் சிலையுடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில் குடமுழுக்கு விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து லட்சுமி, சுதா்சன, நவக்கிரகம் மற்றும் வாஸ்து பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள், யாகசாலை பூஜை, அம்மனுக்கு எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாற்றுதலும் நடைபெற்றது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் யாகசாலையிலிருந்து மேளதாளங்கள் முழங்க புனித நீா் குடங்கள் ஊா்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டு வராகி அம்மனுக்கு மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்கார சேவை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். இவ்விழாவையொட்டி பக்தா்கள், பொதுமக்களுக்கு அன்னதானம், சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.