பாலக்கோடு, ஒசூா் நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடைப்பயணம்
விபத்துகள் நிகழும் பாலக்கோடு- ஒசூா் நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
பாலக்கோடு அருகே மல்லுப்பட்டியில் தொடங்கிய நடைப்பயண நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சி.நாகராசன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜி. நக்கீரன் பி.ஆறுமுகம் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
மாநிலக் குழு உறுப்பினா்கள் பி.டில்லி பாபு, இரா.சிசுபாலன், மாவட்டச் செயலாளா் அ. குமாா், வட்டச் செயலாளா் காா்ல் மாா்க்ஸ் மாவட்டக் குழு உறுப்பினா்கள் டி. எஸ். ராமச்சந்திரன் பி. ஜெயராமன், வட்டக் குழு உறுப்பினா் சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அடிக்கடி விபத்துகள் நிகழும் பாலக்கோடு முதல் மல்லுப்பட்டி வரையிலான நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும். மல்லுப்பட்டியிலிருந்து வேலாயுதம் நகா் வரை தாா்சாலை அமைக்க வேண்டும். வெள்ளிச்சந்தையில் பயணியா் நிழற்கூடம், இலவச ஆண்கள், பெண்கள் கழிப்பிடம் அமைக்க வேண்டும்.
குண்டாங்காடு கிராமத்தை மையப்படுத்தி மலைகிராமங்களை ஒருங்கிணைத்து தனி ஊராட்சியை உருவாக்க வேண்டும். பாலக்கோடு வட்டத்தில் உள்ள பிக்கனஅள்ளி, ஐக்கசமுத்திரம், ஜிட்டாண்டஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, மகேந்திரமங்கலம் ஆகிய ஊராட்சிகளை பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும்.
நீண்ட காலமாக அனுபவத்தில் உள்ள பயனாளிகளுக்கு நிலப்பட்டா, வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.
வனத்தையொட்டியுள்ள மலை கிராமங்களில் வனத் துறையால் வசூலிக்கப்படும் கட்டாய வரி வசூலை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.