ரயிலில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது
இலங்கையிலிருந்து சென்னை வந்தவருக்கு குரங்கு அம்மை இல்லை: சுகாதாரத் துறை
இலங்கையில் இருந்து சென்னை வந்த நபருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்ததால், அவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு அத்தகைய பாதிப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது.
கொழும்பில் இருந்து அண்மையில் சென்னை வந்த விமானத்தில் பயணித்த திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த ஆண் பயணியின் முகங்களில் அம்மை கொப்பளங்கள் இருந்ததால், அவரை விமான நிலையத்தில் இருந்த மருத்துவக் குழுவினரிடம் அழைத்துச் சென்றனா்.
பாா்ப்பதற்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகளாக இருந்ததால், அவரை தனிமைப்படுத்தி மருத்துவக் குழுவினா் விசாரித்தனா். அப்போது, சுற்றுலா பயணியாக இலங்கை சென்ாகவும், அங்கு அழகுசாதன பூச்சு ஒன்றை முகத்தில் பூசியதால் கொப்பளங்கள் வந்துவிட்டதாகவும் தெரிவித்தாா். தொடா்ந்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
புறநோயாளியாக அவரை மருத்துவா்கள் பரிசோதனை செய்தனா். அதில் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்பதால், சில மணி நேரத்தில் அவா் மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டாா்.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவா்களை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். அறிகுறிகள் இருப்பவா்களை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இலங்கையில் இருந்து வந்த நபருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து, அவா் இரவிலேயே அனுப்பி வைக்கப்பட்டாா். அவருக்கு சின்னம்மை அல்லது வாய், கை, கால்களில் ஒவ்வாமையால் ஏற்படும் பாதிப்பு இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.