மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருட்டு
இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தமிழா்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்! -வைகோ
இலங்கையுடன் இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமா் நரேந்திர மோடி, அந்த நாட்டு அதிபா் அநுரகுமார திசாநாயகவுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது இந்தியா - இலங்கை இடையே ஏழு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
அதில் முக்கியமானது, இந்தியா - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணா்வு ஒப்பந்தம். அதன்படி இரு நாட்டு ராணுவங்களின் கூட்டு நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பும், உதவியும் வழங்கும்.
இலங்கைத் தமிழா்களுக்கு எதிராக இனப் படுகொலை நடத்திய இலங்கை ராணுவத்தை பன்னாட்டு நீதிமன்றத்தில் விசாரித்து தண்டிக்க வேண்டும் என்று தமிழ் இனம் போராடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இலங்கையுடன் இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது; தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் துரோகமாகும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.