இஸ்ரேல் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் ஆலோசனை
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போா் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சா் கிதியோனுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசியில் ஆலோசித்தாா்.
இது தொடா்பாக எஸ். ஜெய்சங்கா் புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சா் கிதியோனுடன் பேசியதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேற்கு ஆசிய பிராந்தியத்தின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து அவா் விளக்கமளித்ததை பாராட்டுகிறேன். இந்த உரையாடலின் போது இருதரப்பு உறவுகள் மற்றும் அவற்றை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது’ எனக் குறிப்பிட்டாா்.
சிரியாவில் கடந்த டிசம்பா் 8-ஆம் தேதி அதிபா் அல்-அஸாதின் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடா்ந்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்தும் அவா்கள் விவாதித்தனா் என தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போா் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடா்பான பேச்சுவாா்த்தைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ஹமாஸின் பிடியில் சுமாா் 95 பிணைக் கைதிகள் காஸாவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.