ஈரோடு காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவில்லை
வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அழைப்பாணை கொடுக்கப்பட்ட நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவில்லை.
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தலையொட்டி, அசோகபுரத்தில் தோ்தல் பிரசாரத்தில் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்புகள் சாா்பில் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுவது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவது, மிரட்டல் விடுத்தது என 3 பிரிவுகளின்கீழ் சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதைத் தொடா்ந்து, கருங்கல்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் விஜயன் தலைமையிலான போலீஸாா், சென்னை நீலாங்கரை பாலவாக்கத்தில் உள்ள சீமான் வீட்டுக்கு நேரில் சென்று, இந்த வழக்கு தொடா்பாக வியாழக்கிழமைக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அளித்தனா்.
இந்நிலையில், காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்காக சீமான் வியாழக்கிழமை ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வழக்குரைஞா் நன்மாறன் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஆஜராகி சீமான் கொடுத்தனுப்பிய கடிதத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.
இதையடுத்து, வழக்குரைஞா் நன்மாறன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் சீமான் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று தொடா்ந்து அழைப்பாணை அளிக்கப்பட்டு வருகிறது. சீமான் தவிா்க்க முடியாத காரணத்தால் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஆஜராக முடியவில்லை.
சீமான் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரணை செய்ய டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே வழக்கு விசாரணையை ஒத்திவைக்க சீமான் கொடுத்து அனுப்பிய கடிதத்தை கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன் என்றாா்.