அசைக்க முடியாத இயக்கமாக திமுகவை மாற்றுவோம்: உதயநிதி ஸ்டாலின் சூளுரை
ஈழத்துக்காக எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும்! மாநிலங்களவையில் வைகோ நிறைவு உரை!
மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது நிறைவு உரையை வியாழக்கிழமை நிகழ்த்தினார்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, திமுகவின் சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக தலைவா் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகரன் ஆகிய 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில், தனது நாடாளுமன்ற பயணத்தை நினைவுகூர்ந்து வைகோ இன்று உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
”என் மீது எப்போதும் அன்பு காட்டிய முன்னாள் மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு மனப்பூர்வமாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்.
என்னை மாநிலங்களவைக்கு 1978 முதல் தொடர்ந்து 3 முறை முன்னாள் முதல்வர் கருணாநிதி அனுப்பினார். தற்போது தமிழகத்தில் திராவிட மாடல் அரசை நடத்தி வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் என்னை மீண்டும் 2019 இல் மாநிலங்களவைக்கு அனுப்பினார். திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்த முரசொலி மாறனால் செதுக்கப்பட்டவன் நான்.
இந்திய வரலாற்றில் 19 மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் நான். மிசா சட்டத்தில் 12 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். சிறை வாழ்க்கைப் பற்றி நான் எழுதிய புத்தகத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார்.
இந்த அவையில் மல்லிகார்ஜுன கார்கே, ப. சிதம்பரம், சோனியா காந்தி, திருச்சி சிவா, ஜான் பிரிட்டாஸ், தம்பிதுரை, சரத் பவார், நிர்மலா சீதாரமான், அஸ்வினி வைஸ்ணவ் போன்றவர்களின் உரைகளை நேரடியாகக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. இனி இதையெல்லாம் கேட்க முடியாது என்பது வருத்தம் அளிக்கிறது.
ஈழத் தமிழர்கள் பிரச்னைக்காக 13 முறை நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளேன். ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும்.
அண்ணா முதல்வராக இருக்கும்போது மூன்று மொழிக் கொள்கையைப் பின்பற்ற மாட்டோம், இரு மொழிக் கொள்கையைதான் பின்பற்றுவோம் என தமிழக பேரவையில் தெரிவித்தார்.
தற்போது கர்நாடகம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் ஆகிய அரசாங்கங்கள் தமிழகத்தின் கொள்கையை பின்பற்றுவது பெருமையாக இருக்கிறது.
வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது, என்எல்சி தனியார்மயமாக்குவதை அவரிடம் பேசி தடுத்து நிறுத்தினேன். அவரின் இல்லத்தில் இருந்தே செய்தியாளர்களை சந்தித்து இந்த தனியார்மயமாக்கப்படாது என்ற அறிவிப்பையும் வெளியிட்டேன்.
இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். லாங்ஃபெலோ கவிதையில் வருவதைப் போன்று, உயரத்துக்கு சென்றவர்கள் பறந்து செல்வதில்லை, கூட்டாளிகள் உறங்கும் நேரத்தில் உழைத்துச் சென்றவர் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் அவைக்கு வரும் முன், திட்டமிடலுடன் வரவேண்டும்.” எனத் தெரிவித்தார்.
4 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் 2 முறை மக்களவை உறுப்பினராகவும் வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.