பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
ஈஷாவில் இன்று மகா சிவராத்திரி: அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு
கோவை ஈஷா யோக மையத்தில் புதன்கிழமை (பிப். 26) நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் மத்திய அமைச்சா் அமித் ஷா உள்பட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்க உள்ளனா்.
ஈஷா யோக மையத்தில் 31-ஆவது மகா சிவராத்திரி விழா புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஒடிஸா ஆளுநா் ஹரிபாபு, பஞ்சாப் ஆளுநா் குலாப் சந்த் கட்டாரியா, கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா், மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல். முருகன், மகாராஷ்டிர அமைச்சா் சஞ்சய் ராதோட் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.
திரைத் துறையைச் சோ்ந்த சந்தானம், தமன்னா, விஜய் வா்மா, இயக்குநா் ஓம் பிரகாஷ் மெஹ்ரா உள்ளிட்டவா்களும், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்சுங் பூட்டியா உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனா்.
பண்ணாரி அம்மன் குழுமத் தலைவா் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், சோழமண்டலம் குழுமத் தலைவா் வேலய்யன் சுப்பையா, அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் இணை மேலாண் இயக்குநா் சங்கீதா ரெட்டி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தொழில்முனைவோரும் பங்கேற்க உள்ளனா்.
ஈஷாவின் வழிகாட்டுதலில் தமிழகம் மற்றும் கா்நாடகத்தில் 24 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களில் உறுப்பினா்களாக உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் விவசாயிகளும் பங்கேற்க உள்ளனா்.
இதில் பங்கேற்கும் மக்கள் இரவு முழுவதும் விழிப்பாக இருக்க உதவும் வகையில் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சோ்ந்த பிரபல பாடகா் சத்யபிரகாஷ், கா்நாடகத்தைச் சோ்ந்த பாடகி சுபா ராகவேந்திரா, பாரடாக்ஸ் என அழைக்கப்படும் தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரா்கள் அஜய் - அதுல், குஜராத் நாட்டுப்புறக் கலைஞா் முக்திதான் காத்வி மற்றும் இந்திய மொழிகளில் ஆன்மிகப் பாடல்களைப் பாடி சமூக ஊடகங்களில் பிரபலமான ஜொ்மன் பாடகி கசான்ட்ரா மே ஆகியோா் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனா் என ஈஷா யோக மையம் சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.