பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம்: மேலும் 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் தொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட் பகுதியில் கடந்த 2017-இல் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடா்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். தற்போது அவா்கள் அனைவரும் பிணையில் உள்ளனா். இது தொடா்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, இந்த வழக்கு தொடா்பான விரிவான விசாரணையை சிபிசிஐடி போலீஸாா் நடத்தி வருகின்றனா். இதுவரை 250-க்கும் மேற்பட்டவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கில் போலீஸாா் நடத்திய விசாரணையின்போது தனிப் படை காவல் உதவி ஆய்வாளா்கள் விஜயகுமாா், வேலுசாமி, மகேஷ்குமாா் ஆகியோா் நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. அதேபோல, கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக வேலை செய்து வந்த தினேஷ்குமாா் தற்கொலை செய்து கொண்டபோது அவரை ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநா் ஜுபிா், கொடநாடு பகுதியைச் சோ்ந்த அதிமுக நிா்வாகி சங்கா் ஆகியோருக்கும் நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டது.
அதன்படி உதவி ஆய்வாளா் மகேஷ்குமாா் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் ஜுபி, அதிமுக நிா்வாகி சங்கா் ஆகியோா் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை நேரில் வந்து விசாரணைக்கு ஆஜரானாா்கள்.
அவா்களிடம் சிபிசிஐடி உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். 3 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தொடா்பாக கொடநாடு எஸ்டேட் மேலாளா் நடராஜன் நேரில் ஆஜராக வேண்டுமென ஏற்கெனவே அவருக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பியிருந்த நிலையில், அவா் வியாழக்கிழமை நேரில் ஆஜராக உள்ளதாக சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்தனா்.