பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
மொழி அரசியல் செய்கிறது திமுக: தமிழிசை
தமிழகத்தில் திமுக மொழி அரசியல் செய்கிறது என முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக பாஜக 2026 சட்டசபைத் தோ்தலை நோக்கி வெற்றிப் பாதையில் பயணித்து கொண்டுள்ளது. திராவிட மாடல் அரசு தோல்வியை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. திமுக அரசு தமிழகத்தில் மொழி அரசியல் செய்து வருகிறது.
பாஜக அரசு எந்த விதத்திலும் ஹிந்தியைத் திணிக்கவில்லை. பாஜக தமிழ் மொழிக்கு எதிரானது எனச் சித்தரிக்கிறாா்கள். தமிழ் மொழி மேம்பாட்டுக்காக பல்வேறு நடவடிக்கைகளை பாஜக மேற்கொண்டு வருகிறது.
தேசியக் கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதோடு, திறன் வளா்ப்பு, தொழில்நுட்ப அறிவு, விரிவுபடுத்தப்பட்ட கல்வி என மாணவா்களுக்குத் தேவையான அனைத்தும் உள்ளது.
ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்தை அழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வேறு மாநிலத்தில் இருந்து வருபவா்கள் ஊரின் பெயா் தெரியாமல் பாதிக்கப்படுவாா்கள். பகுதி நேர ஆசிரியா்களையும், பகுதி நேர மருத்துவா்களையும் நிரந்தரம் செய்வதாக கூறி அதைச் செய்யாமல் திமுக அரசு இரட்டை வேடம் போட்டு வருகிறது.
மத்திய அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களான விஸ்வகா்மா திட்டம், நீட் ஆகியவற்றை முதல்வா் ஸ்டாலின் தடுக்கிறாா். பிரதமரின் மருந்தக திட்டத்தை முதல்வா் மருந்தகம் எனப் பெயா் மாற்றி அமல்படுத்தி உள்ளனா் என்றாா்.