உ.பி: நேபாளத்துக்கு போதைப் பொருள் கடத்த முயன்ற நபர் கைது!
இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு போதைப் பொருள் கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தின் பஹ்ராய்ச் மாவட்டத்தில் இந்தியாவிலிருந்து நேபாள நாட்டிற்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக நேற்று (ஜன.2) காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் அடிப்படையில் நேற்று இரவு 10 மணியளவில் சாஷாஸ்திரா சீமா பால் படையினரும் அம்மாநிலத்தின் உள்ளூர் காவல் துறையினரும் இணைந்து அம்மாநிலத்தின் இந்திய எல்லையில் சோதனை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, இந்திய - நேபாள எல்லைத் தூண் 651/11 அருகே துவிதாப்பூரைச் சேர்ந்த ராம் சாகர் என்பவரை சோதனை செய்தனர்.
இதையும் படிக்க: இந்தியாவில் எச்எம்பிவி வைரஸ் பாதிப்பா? பொது சுகாதார இயக்குநரகம் விளக்கம்!
அப்போது, ஒரு கருப்பு நிற பாலித்தீன் பையில் சுற்றப்பட்டு 70 கிராம் அளவிலான போதைப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பஹ்ரைச்சை சேர்ந்த நபர் ஒருவர் இவரிடம் அந்த போதைப் பொருளைக் கொடுத்து இந்திய எல்லையைக் கடந்து நேபாள் நாட்டில் ஒரு தரகரிடம் ஒப்படைக்க சொன்னதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.