உக்ரைனில் விரைவில் போர் நிறுத்தம்! பிரான்ஸ் வலியுறுத்தல்
உக்ரைனில் நீடிக்கும் சண்டைக்கு வெகுவிரைவில் முற்றுப்புள்ளி வைக்க பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் ஐரோப்பிய அவசரநிலை மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான். இந்த பேச்சுவார்த்தைக்குப்பின், உக்ரைனில் நீடிக்கும் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து மேக்ரான் கூறியிருப்பதாவது, “உக்ரைனில் நீடித்த அமைதி நிலவ நாங்கள் விரும்புகிறோம். இதனை அடைய, ரஷியா தமது ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும்.
மேலும், உக்ரைன் மக்களுக்கு வலிமையான நம்பிக்கையளிக்கும் விதத்தில் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கிடவும் வேண்டும். இல்லையெனில், போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், அது ‘மின்ஸ்க் ஒபந்தங்கள்’ போல முடிந்துவிடும். இந்த விவகாரத்தில் நாங்கள் அனைத்து ஐரோப்பிய நாடுகளுடனும் அமெரிக்கா மற்றும் உக்ரைனுடன் இணைந்து பணியாற்றுவோம். இதுவே சிறந்த வழி” என்றார்.
மேலும், “ஐரோப்பிய நாடுகள் தங்களின் எதிர்கால பாதுகாப்புக்காக அதிகம் முதலீடு செய்தாக வேண்டுமென்ற கருத்திலும் உடன்படுகிறோம். ஐரோப்பிய ஆணையத்தின் முன்மொழிவுகளை ஏற்று, அதன்படி உக்ரைனுக்கு ஆதரவாகவும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் அதற்கான முதலீட்டு நடவடிக்கைக்கான பணிகள் சுணக்கமின்றி நடைபெறும்” என்றார்.