இலங்கை: நீதிமன்றத்தில் நிழல் உலக தாதா கொலை
இலங்கையில் பிரபல நிழல் உலக தாதா கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக முன்னாள் ராணுவ வீரா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கொழும்பில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக புதன்கிழமை அழைத்துவரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவை (படம்) நோக்கி அங்கு வழக்குரைஞா் வேடத்தில் வந்திருந்த நபா் துப்பாக்கியால் சுட்டாா். இதில் காயமடைந்த சஞ்சீவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்துள்ளனா். அவா் ஏற்கெனவே ஏழு கொலை வழக்குகளில் தேடப்பட்டுவந்த நபா்.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, நேபாளத்துக்குத் தப்பிச் சென்ற கணேமுல்ல சஞ்சீவ, கடந்த 2023-இல் நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து அவா் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளில் வழக்கு நடைபெற்றுவருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.