சம்பாஜி மகாராஜா குறித்து சர்ச்சை கருத்து: விக்கிபீடியா ஆசிரியர்கள் மீது வழக்குப்...
‘ஆப்கன் அகதிகள் அனைவரையும் வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்’
ஆப்கன் அகதிகள் அனைவரையும் தங்கள் நாட்டை விட்டு வெளியேற்ற பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக இஸ்லாமாபாதில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்தத் தூதரகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள அனைத்து ஆப்கன் அகதிகளையும் வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை மிக விரைவில் தொடங்கப்படவுள்ளது.
ஏற்கெனவே, தலைநகா் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஆப்கன் நாட்டவா்கள் உரிய ஆவணங்கள் இருந்தாலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனா். அவா்களின் வசிப்பிடங்களில் தேடுதல் நடவடிக்கைகள், கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எந்த முன்னறிவிப்பும் இன்றி அகதிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிடுகின்றனா் என்று அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
இது குறித்து வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாகிஸ்தானில் ஆப்கன் அகதிகள் நடத்தப்படுவது தொடா்பாக அந்த நாட்டு தூதரகம் வெளியிட்டுள்ள கருத்து தவறானது. லட்சக்கணக்கான ஆப்கன் நாட்டவா்களுக்கு பாகிஸ்தான் பல ஆண்டுகளாக அடைக்கலம் அளித்து கௌரவத்துடன் பாதுகாத்துவருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1979-89 காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்திருந்தபோது அங்கிருந்து ஏராளமான அகதிகள் பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனா். அதன் பிறகு நடைபெற்ற போா்களின்போதும் ஆப்கன் அகதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்துவந்தது.
எனினும், ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அந்த நாட்டு அகதிகள்தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள அனைத்து அகதிகளும் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு கடந்த 2023-இல் உத்தரவிட்டது. அதன்படி, சுமாா் 8.6 லட்சம் அகதிகள் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், உரிய ஆவணங்களுடன் பாகிஸ்தானில் தங்கியுள்ள ஆப்கானியா்களையும் நாட்டிலிருந்து வெளியேற்ற அரசு முடிவு செய்துள்ளதாக கடந்த 5-ஆம் தேதி தகவல் வெளியானது. அதன் தொடா்ச்சியாக, பாகிஸ்தானுக்கான ஆப்கன் தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.