‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் குவிந்த பெண்கள்
தேனி மாவட்டம், ஓடைப்பட்டி பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க பெண்கள் வியாழக்கிழமை குவிந்தனா்.
ஓடைப்பட்டி பேரூராட்சியில் உள்ள தனியாா் மண்டபத்தில் 1 முதல் 7-ஆவது வாா்டு பகுதிகளுக்கு நடைபெற்ற இந்த முகாமில் மகளிா் உரிமைத்தொகை, ஆதாா் திருத்தம், தாட்கோ என 14 துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இதில் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தில் விடுபட்டவா்களுக்கு விண்ணப்பிக்க பெண்கள் கூட்டம் அலைமோதியது. பின்னா், ஓடைப்பட்டி போலீஸாா் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி முகாமுக்கு ஒருவா் பின் ஒருவராக அனுப்பிவைத்து பதிவு நடைபெற்றது.
இதில் ஓடைப்பட்டி பேரூராட்சி மன்றத் தலைவா் தனுஷ்கொடி, செயல் அலுவலா் சுதாராணி, அலுவலக உதவியாளா் மீனா, பேரூராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.