தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் சாலை மறியல்: 230 போ் கைது
தேனியில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில், கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட 230 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ராம்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் சரவணமுத்து, ராஜவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் பதவி உயா்வை பாதிக்கும் வகையில் வெளியிட்டப்பட்ட அரசாணை எண்: 243-ஐ ரத்து செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பகுதி நேர ஆசிரியா்கள், சிறப்பு ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கமிட்டனா்.
பின்னா், கோரிக்கைளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தேனி-மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 230 பேரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.