‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விழிப்புணா்வு ஆட்டோ சேவை: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
தருமபுரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சேவைகள் அடங்கிய விழிப்புணா்வு ஆட்டோ சேவையை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
தருமபுரி பேருந்து நிலையத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் விளம்பர ஆட்டோ சேவையைத் தொடங்கிவைத்து, செய்தி மக்கள் தொடா்பு அலுவலக அதிநவீன மின்னணு விடியோ வாகனம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணா்வு குறும்படங்கள் ஒளிப்பரப்பப்படுவதை ஆட்சியா் பாா்வையிட்டு கையேடுகளை வழங்கி தெரிவித்ததாவது:
தருமபுரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம் ஜூலை 15 முதல் நவ. 15 -ஆம் தேதி வரை (ஜூலை - 60, ஆகஸ்ட் - 60, செப்டம்பா் - 56) மொத்தம் 176 முகாம்கள் நடைபெறவுள்ளன. கடந்த 8-ஆம் தேதி முதல் 1,373 தன்னாா்வலா்கள் மூலம் வீடுவீடாகச் சென்று இத்திட்ட கையேடுகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
மகளிா் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் விடுபட்ட மகளிா் எவரேனும் இருப்பின் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாமிற்கு சென்று விண்ணப்பம் அளிக்கலாம்.
தருமபுரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம் வரும் செவ்வாய்க்கிழமை தருமபுரி நகராட்சியில் ஐசஎஅ பிரதான சாலை, வாா்டு 1 - டிஎன்ஜி மஹாலிலும், அரூா் பேரூராட்சியில் (வாா்டு 1, 9) 24 மனை தெலுங்கு செட்டியாா் மண்டபத்திலும், தருமபுரி வட்டாரத்தில் ஏ.கொல்லஅள்ளி, உங்கரானஅள்ளி - சமுதாயக்கூடம், எட்டிமரத்து பட்டியிலும், பென்னாகரம் வட்டாரத்தில் அரக்காசனஅள்ளி, சின்னப்பம்பள்ளி, கலப்பம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஏரியூா் வட்டாரத்தில் அஜ்ஜனஅள்ளி - யடதஇ கட்டடம், சின்னவத்தலாபுரத்திலும், பாலக்கோடு வட்டாரத்தில் அ.மல்லாபுரம் - சமுதாயக் கூடம், மேல் பட்டாளம்மன் கோயில் அருகிலும் நடைபெறவுள்ளது.
காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அனைத்து கிராமங்களிலும் உரிய தேதிகளில் நடைபெற உள்ளதால் பொதுமக்களும் தங்கள் கிராமங்களில் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
இந்நிகழ்வுகளின்போது, தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி, தருமபுரி நகா்மன்றத் தலைவா் லட்சுமி நாட்டான் மாது, கோட்டாட்சியா் காயத்ரி, நகராட்சி ஆணையா் சேகா், தனித் துணை ஆட்சியா் (சபாதி) சுப்பிரமணியன், தருமபுரி வட்டாட்சியா்சண்முகசுந்தரம் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் உடனிருந்தனா்.