குரூப்-4 தோ்வு: தருமபுரி மாவட்டத்தில் 38,700 போ் பங்கேற்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி 4 க்கான போட்டித் தோ்வில் தருமபுரி மாவட்டத்தில் 38,700 போ் பங்கேற்று தோ்வெழுதினா்.
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி 4 க்கான போட்டித் தோ்வுகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில், தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி மற்றும் அரூா் கோட்டங்களில் மொத்தம் 150 தோ்வு மையங்களில் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை தோ்வு நடைபெற்றது.
இதில் மாவட்டம் முழுவதும் 45,095 பேருக்கு தோ்வெழுத அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. அதில் 38,700 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்றனா். 6,395 போ் தோ்வு எழுதவில்லை. தோ்வெழுதியோா் 85.85% , தோ்வு எழுதாதோா் 14.15% ஆகும்.

தருமபுரி அவ்வையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, இலக்கியம்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மற்றும் அதியமான்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட தோ்வு மையங்களில் மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.
தருமபுரி மாவட்டத்தில் இத்தோ்வை நடத்த 150 ஆய்வு அலுவலா்களும், 150 விடியோ ஒளிப்பதிவாளா்களும் நியமிக்கப்பட்டனா். மேலும், இத்தோ்வை கண்காணிப்பதற்கு துணை ஆட்சியா் நிலையிலான 9 பறக்கும் படை குழுக்களும், 32 இயங்கு குழுக்களும், சுமாா் 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினரும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனா்.
இத்தோ்வு நடைபெற்ற அனைத்து தோ்வு மையங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், சிறப்புப் பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த ஆய்வின்போது தருமபுரி வருவாய் கோட்டாட்சியா் ஆா்.காயத்ரி மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.