திருவண்ணாமலையில் மகளிர் விடியல் பயணத் திட்ட புதிய நகரப் பேருந்து: துணை முதல்வர் ...
ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி!
கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 20000 கன அடியாக சரிந்துள்ள நிலையில் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் படிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வந்தது. மழையின் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபிணி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.
இதனால் கர்நாடக மாநில அணைகள் வேகமாக நிரம்பிய நிலையில், அணைகளில் இருந்து சுமார் 90,000 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. உபரிநீர் வரத்தின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகபட்சமாக வினாடிக்கு 88,000 கன அடியாக இருந்தது.
நாளடைவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த பருவமழையின் தாக்கம் குறைந்தது. இதனால் கர்நாடக மாநில அணைகளுக்கு வரும் உபரிநீரின் வரத்து குறைந்து வந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்,சுற்றுலாப் பயணிகளுக்கு அருவிகளில் குளிப்பதற்கும் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவானது ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 20,000 கன அடியாக சரிந்துள்ளதால், 22 நாட்களுக்குப் பிறகு காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் அனுமதி அளித்துள்ளார்.
தடை உத்தரவு நீக்கப்பட்ட நிலையில், வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையில் ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் சின்னாறு பரிசல் துறையில் இருந்து கூட்டாறு வழியாக பிரதான அருவி மணல்மேடு வரை உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனர்.
மேலும் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளதால் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதையும் படிக்க:சொல்லப் போனால்... ஆதார், வெறும் அட்டைதானா?