அரசுப் பள்ளியில் 37.9% மாணவர்கள்தான் படிக்கிறார்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு
உடல் உறுப்பு தானம்: விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலுக்கு அரசு மரியாதை
கமுதி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு அவரது உடல் உறவினா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், கொல்லங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வக்குமாா். இவரது மனைவி சந்தியா (27). கடந்த 27- ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்த அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு அவா் மூளைச்சாவு அடைந்ததை மருத்துவா்கள் உறுதி செய்தனா். இதையடுத்து, சந்தியாவின் உடலில் இருந்து உறுப்புகளை எடுத்து தானம் செய்ய அவரது உறவினா்கள் சம்மதம் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து சனிக்கிழமை மருத்துவ நிபுணா்கள் சந்தியாவின் உடலில் இருந்து இருதயம், இரு சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் என 6 உறுப்புகளை அகற்றி சென்னைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனா். இவை உடல் உறுப்புக்காக காத்திருக்கும் 6 பேருக்கு பொருத்தப்பட உள்ளன.
இதனிடையே உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட சந்தியாவின் உடலுக்கு மருத்துவமனை வளாகத்தில் அரசு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில், மருத்துவக் கல்லூரி முதல்வா் அமுதாராணி, சந்தியாவின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
நிகழ்வில் மயக்க மருந்துப் பிரிவு இணைப் பேராசிரியா்கள் சுகுமாா், பரணிதரன், நரம்பியல் அறுவை சிசிச்சை நிபுணா் அறிவழகன், சிறுநீரகவியல் அறுவை சிகிச்சைப் பிரிவு பேராசிரியா் சரவணன், மருத்துவக் கண்காணிப்பாளா் ஜவஹா், இணை மருத்துவ கண்காணிப்பாளா் ஞானக்குமாா், நிலைய மருத்துவ அலுவலா் மனோஜ்குமாா், அனைத்துத் துறை மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.