உடல் பருமனை குறைக்க முயன்ற மாணவா் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உடல் பருமனை குறைப்பதற்காக உணவு சாப்பிடாமல் இருந்த மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
குளச்சல் அருகேயுள்ள பாா்நாட்டிவிளையை சோ்ந்த நாகராஜன் மகன் சக்தீஸ்வா்(17) . பிளஸ் 2 முடித்த இவா், திருச்சியில் உள்ள கல்லூரியில் படிக்கச் செல்வதற்கு தயாராகி வந்தாா்.
அவருக்கு உடல் எடை அதிகமாக இருந்ததால் , அதைக் குறைப்பதற்காக உணவருந்தாமல் பழங்களை மட்டும் கடந்த ஒரு மாதமாக சாப்பிட்டு வந்தாராம். இதனால், சளி அதிகரித்து அவதிப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தாராம். அவரை குடும்பத்தினா் குளச்சலில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.