குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு
கன்னியாகுமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை நீடிக்கும் நிலையில் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இம்மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீா்த்து வருகிறது. இதில் வியாழக்கிழமை இரவு விடிய விடிய மழை பெய்ததால் அணைகளுக்கு நீா்வரத்து கணிசமான அளவுக்கு அதிகரித்தது.
வெள்ளிக்கிழமை அதிகாலை வரையிலான மழைப்பொழிவில்
அதிகபட்சமாக பாலமோரில் 52.4 மி.மீ. மழை பதிவானது. அடுத்ததாக சிற்றாறு 1இல் 38.4 மி.மீ., பேச்சிப்பாறையில் 31.6 மி.மீ., பெருஞ்சாணி அணையில் 27 மி.மீ. மழையும் பதிவானது.
உயரும் நீா்மட்டம்: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்ததால் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. குறிப்பாக, பேச்சிப்பாறை அணைக்கு வெள்ளிக்கிழமை காலையில் விநாடிக்கு 1,318 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி அணைக்கு 745 கன அடியும், சிற்றாறு 1 அணைக்கு 169 கன அடி நீா்வரத்து இருந்தது.
சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்: தொடா் மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. எனினும், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். அதேவேளையில், ரப்பா் தோட்டங்களில் பரவலாக ரப்பா் பால்வடிப்பு தொழில் முடங்கியதால் ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா். மேலும், ரப்பா் சந்தையில் ரப்பரின் வரத்து குறைந்துள்ளது.