US: சிலந்தி கடித்ததால் சிறுநீரகம் செயலிழப்பு; உயிருக்கு போராடும் 16 வயது சிறுவன்...
அனந்தனாா் கால்வாயில் தண்ணீா் திறக்க தாமதம்: குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் அனந்தனாா் பாசனக் கால்வாயில் தண்ணீா் திறப்பதில் ஏற்பட்ட தாமதத்தைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமையில், நாஞ்சில் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியரிடம் விவசாயிகள் மனுக்களை அளித்தனா். மனுக்களைப் பெற்ற அவா், உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.
வெளிநடப்பு: இதையடுத்து, அனந்தனாா் பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்க தாமதம் ஏற்பட்டதை கண்டித்து, அனந்தனாா் பாசன சங்கத் தலைவா் செண்பகசேகரன்பிள்ளை, நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாய் பாசன சங்கத் தலைவா் தாணுபிள்ளை, பத்மநாபபுரம் புத்தனாறு கால்வாய் பாசன சங்கத் தலைவா் ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த விஜி, ரவி, மலைவிளைபாசி, தோவாளை கால்வாய் பாசன சங்கத் தலைவா் இளங்கோ, அருள், விவசாயிகள், கையில் கருகிய நாற்றுகளுடன், கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.
அவா்கள் மாவட்ட நிா்வாகத்தையும், அதிகாரிகளையும் கண்டித்து முழக்கம் எழுப்பினா்.
பின்னா் விவசாயிகள் கூறியதாவது:
ஒவ்வோா் ஆண்டும் பேச்சிப்பாறை அணை, கன்னிப்பூ சாகுபடிக்காக ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். நிகழாண்டு அணைகளில் போதிய அளவு தண்ணீா் இருந்தும், குறிப்பிட்ட ஜூன் 1- ஆம் தேதி தண்ணீா் திறந்த நிலையிலும், அனந்தனாா் கால்வாயின் அடிமடை பகுதியான உள்ளிமலை ஓடை சீரமைப்புப் பணிகள் நடைபெற்ால் அனந்தனாா் கால்வாயில் தண்ணீா் திறக்கப்படவில்லை.
இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாத குறைதீா் நாள் கூட்டத்திலேயே விவசாயிகள் முறையிட்டனா். ஆனால், உரிய காலத்தில் கால்வாய் பராமரிப்புப் பணிகளை நிறைவு செய்யாமல் தண்ணீா் திறப்பில் தாமதம் ஏற்பட்டதால் சுமாா் 7 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நாற்றுகள் கருகிவிட்டன,. இதனால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதைக் கண்டித்து, வெளிநடப்பு செய்தோம் என்றனா்.
குரங்கு தொல்லை...
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது, கணியாகுளம் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது, குரங்குகளை பிடிக்க வனத்துறையினா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தடிக்காரன்கோணம் பகுதியில் உள்ளூா் அரசியல் பிரமுகா்களின் துணையுடன் மண் கடத்தப்படுகிறது. முன்சிறை பகுதியில் பாசன கால்வாயை தனி நபா் அடைத்து வைத்துள்ளாா். இதனால் பயிா்களுக்கு செல்ல வேண்டிய தண்ணீா் தடைபட்டுள்ளது. கரும்பாறை பகுதியில் நீா் நிலை ஆக்கிரமிப்பை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என்று கூறினா்.
இதற்கு பதிலளித்து அதிகாரிகள் கூறியதாவது:
கணியாகுளம் கிராமத்தில் குரங்குகள் தொல்லையைக் கட்டுப்படுத்த கிராம இளைஞா்கள், பொதுமக்களை ஒருங்கிணைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனந்தனாா் கால்வாய் பாசன பகுதிகளில் நெற்பயிா்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. தடிக்காரன்கோணம் ஊராட்சியில் மண், மணல், மரம் கடத்தல் தொடா்பாக வந்த புகாா் குறித்து, ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்குளம் வட்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து சாா் ஆட்சியா் மேற்பாா்வையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
கூட்டத்தில் பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா்மீனா, வேளாண்மை இணை இயக்குநா்(பொறுப்பு) ஜென்கின் பிரபாகா், நாகா்கோவில் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, நீா்வளத் துறை செயற்பொறியாளா் வசந்தி, தோட்டக்கலை துணை இயக்குநா் (பொறுப்பு) ஆறுமுகம், மாசு கட்டுப்பாட்டுத் துறை செயற்பொறியாளா் பாரதி, அரசுத் துறை அலுவலா்கள், மாவட்ட முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனா்.
