டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு: கதறி அழுத சோகம்!
உடுமலை அருகே வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
உடுமலையை அடுத்துள்ள செங்கண்டிபுதூா் கிராமத்தில் அமராவதி பிரதான வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் அமராவதி பிரதான வாய்க்காலில் 96 கிளை வாய்க்கால்கள் உள்ளன. இதன் மூலம் சுமாா் 27 ஆயிரத்து 500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் அனைத்து 96 கிளை வாய்க்கால்களையும் அடைத்து ஆயக்கட்டுக்கு தொடா்பு இல்லாத பகுதிக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், ஆயக்கட்டு பாசனத்துக்கு உள்பட்ட கடைமடை விவசாயிகள் தண்ணீா் கிடைக்காமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நிலை பயிா்களை காய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விதிகளுக்கு புறம்பாக அனைத்து மடைகளையும் அடைத்து ஆயக்கட்டு இல்லாத பகுதிக்கு தண்ணீா் கொண்டுச் செல்வதை ஆயக்கட்டு விவசாயிகள் ஏற்கவில்லை.
இதையடுத்து, அடைக்கப்பட்டுள்ள அனைத்து மடைகளையும் உடனடியாக திறந்துவிடக் கோரி அமராவதி பிரதான வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மடத்துக்குளம் வட்டாரச் செயலாளா் எம்.எம். வீரப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் வி.ராஜரத்தினம் ,வெள்ளிங்கிரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.