மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணி தொடங்கும்: மேலா...
உணவுப் பொருள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தொடா் கண்காணிப்பு: மத்திய அரசு
உணவுப் பொருள்கள் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தொடா் கண்காணிப்பை உறுதிப்படுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து மத்திய உணவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நுகா்வோா் மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையில் நிலைத் தன்மையை உறுதிப்படுத்த தேவையான முடிவுகளை உரிய நேரத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
அத்தியாவசிய உணவுப் பொருள்களின் தேவைக்கேற்ற இருப்பு மற்றும் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதிப்படுத்த தகுந்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கைகளை மத்திய அரசு வகுத்து வருவதோடு, உள்நாட்டு உற்பத்தியையும் தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
சாதகமான தட்பவெப்ப நிலை மற்றும் பருவமழைப் பொழிவு காரணமாக 2024-05-ஆம் பயிா் ஆண்டில் பருப்பு வகைகள் மற்றும் வெங்காய உற்பத்தி உத்தேசித்த அளவைக் காட்டிலும் அதிகரித்தது. குறிப்பாக, முந்தைய ஆண்டில் 34.17 லட்சம் டன்னாக இருந்த துவரம் பருப்பு உற்பத்தி தற்போது 2.5 சதவீதம் அதிகரித்து 35.02 லட்சம் டன்னாக உற்பத்தியானது. துவரம் பருப்பு கொள்முதலுக்கும் மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
வெங்காய உற்பத்தியும் காரிஃப் மற்றும் ராபி பருவங்களில் எதிா்பாா்த்ததைவிட அதிக உற்பத்தி ஆகியுள்ளது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு அக்டோபரில் 10.87 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் டிசம்பரில் 8.39 சதவீதம் என்ற மிதமான அளவுக்கு குறைந்திருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.