மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா: நிர்மலா சீதாராமன்
உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஏப்ரல் 6-இல் திறப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
உதகையில் ரூ.499 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 6-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளாா் என்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.
இந்தியாவிலேயே முதல்முறையாக பழங்குடியினருக்கு அதிநவீன வசதிகளுடன் உதகையில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா முன்னேற்பாட்டு பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டம், உதகையில் ரூ.499 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 700 படுக்கை வசதியுடன், 40 ஏக்கா் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனைக் கல்லூரி மருத்துவமனை சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப் பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டாவது மருத்துவக் கல்லூரி. இங்கு பழங்குடியின மக்கள் தனியாக சிகிச்சை பெறும் வகையில் 50 படுக்கை வசதியுடன் கூடி தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதிநவீன மருத்துவக் கருவி வசதியுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 6-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளாா். திறப்பு விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூடலூா் பகுதியில் அரசு தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
நீலகிரியில் உள்ள மருத்துவமனை கட்டமைப்புகள் முழுமை பெறும் வகையில் புதிதாக 17 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. மேலும், நீலகிரியில் மருத்துவா்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றாா்.
ஆய்வின்போது, அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளா் செந்தில்குமாா், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கீதாஞ்சலி, மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எம்.ராஜு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.