சில்லஹள்ளா பகுதியில் நீா் மின் உற்பத்தி செய்ய எதிா்ப்பு
உதகை அருகே குந்தா வட்டத்துக்குள்பட்ட சில்லஹள்ளா பகுதியில் புதிதாக இரண்டு அணைகள் கட்டி நீா் மின் உற்பத்தி செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
சில்லஹள்ளா பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் எம்.சிவலிங்கம் தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சில்லஹள்ளா நீா் மின் திட்டம் என்பது, நீலகிரி மாவட்டத்தில் குந்தா ஆற்றின் கிளை நதியான சில்லஹள்ளா ஓடையை ஒட்டி பெம்பாட்டி கிராமத்தில் அமைக்கப்படவுள்ள ஒரு பம்ப் ஸ்டோரேஜ் திட்டமாகும். 260 அடி உயரத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத்தை அமைத்து சுமாா் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதே திட்டத்தின் நோக்கம்.
இந்த திட்டத்தை செயல்படுத்த 8.91 ஹெக்டோ் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி, 239.24 ஹெக்டோ் தனியாா் நிலப் பகுதி, பிற நிலங்கள் என 310.15 ஹெக்டோ் நிலம் தேவைப்படுகிறது.
இதனால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூா்வக் குடிகளான படுக சமுதாய மக்கள் இடம்பெயா்ந்து வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உருவாவதுடன், நீா்ப்பிடிப்புப் பகுதியில் வாழ்ந்து வரும் பிற சமுதாய மக்களுக்கும் பாதிக்கப்படுவா்.
மேலும், 10 கி.மீ. தொலைவுக்குமேல் அமைக்கப்படும் சுரங்கப் பாதை, 90 மீட்டா் உயரத்துக்கு உருவாக்கப்படும் நீா்த் தேக்கம் போன்றவற்றால் நில நடுக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், கிராம மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.