கோவை - மயிலாடுதுறை ரயில் எல்.ஹெச்.பி.பெட்டிகளுடன் இயக்கம்! பயணிகள் கேக் வெட்டிக...
உதகையில் 9-ஆவது சா்வதேச குறும்பட விழா தொடக்கம்
உதகையில் 9-ஆவது சா்வதேச குறும்பட விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா்.
சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில் கலை ஆா்வம் கொண்ட சிலா் குழுவாக இணைந்து கடந்த சில ஆண்டுகளாக குறும்பட விழா நடத்தி வருகின்றனா். திரைப்படத்துக்கு முன்னோட்டமாக கருதப்படும் குறும்படங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் நடத்தப்படும் இந்த குறும்பட விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட சிறப்புவாய்ந்த குறும்படங்களை திரையிட்டு வருகின்றனா். மேலும், தமிழகத்தைச் சோ்ந்த குறும்படங்கள் மற்றும் குறும்பட கலைஞா்களை ஊக்கப்படுத்தி அங்கீகரித்து வருகின்றனா்.
இந்நிலையில், உதகையில் உள்ள அசெம்பிளி ரூம்ஸ் அரசுத் திரையரங்கில் நடப்பு ஆண்டுக்கான குறும்பட விழாவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா்.
இந்த குறும்பட திருவிழா டிசம்பா் 29-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த விழாவை தமிழ்நாடு வணிகா் சங்கம் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் முகமது பாரூக் மற்றும் சங்க உறுப்பினா்கள் நடத்துகின்றனா்.
மூன்று நாள்கள் நடைபெறும் இந்த குறும்பட விழாவில் 50 நாடுகளைச் சோ்ந்த 550-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதில் நீலகிரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தா்கள் என்று அழைக்கப்படும் தோடா் இன பழங்குடியின மக்களின் வாழ்க்கையை குறித்த குறும்படமும் முதன்முறையாக இடம் பெற்றுள்ளது.
சிறந்த குறும்படம், சிறந்த இயக்குநா் மற்றும் சிறந்த நடிகருக்கான தங்க யானை, பசுமை யானை விருதுகள் விழாவின் நிறைவு நாளான 29-ஆம் தேதி வழங்கப்பட உள்ளன. மேலும், இந்த குறும்பட விழாவில் தோ்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் ஜொ்மனியில் பிப்ரவரியில் நடைபெறும் சா்வதேச குறும்பட விழாவில் பங்கேற்க உள்ளது.