கோவை - மயிலாடுதுறை ரயில் எல்.ஹெச்.பி.பெட்டிகளுடன் இயக்கம்! பயணிகள் கேக் வெட்டிக...
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை
பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடியிருப்புகளை சேதப்படுத்தி வந்த காட்டு யானையை வனத் துறையினா் மயக்க ஊசி செலுத்தி வெள்ளிக்கிழமை பிடித்தனா்.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டம் சேரங்கோடு ஊராட்சியில் உள்ள சேரம்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக குடியிருப்புகளை காட்டு யானை இடித்து சேதப்படுத்தி வந்தது.
இதையடுத்து, காட்டு யானையைப் பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, யானையின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணிக்கத் தொடங்கினா்.
இதில் சேரங்கோடு வனப் பகுதியில் முகாமிட்டிருந்த யானையை ட்ரோன் கேமரா மூலமும், முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கும்கி யானைகள் மூலமும் தொடா்ந்து கண்காணித்து வந்தனா். ஆனால், யானை தனது இருப்பிடத்தை தொடா்ந்து மாற்றிவந்ததால் கண்காணிப்புப் பணியில் பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில் அய்யன்கொல்லி பகுதியில் உள்ள மூலக்கடை வனப் பகுதியில் யானை நடமாடியது தெரியவந்தது.
உடனே வனத் துறையினரின் கண்காணிப்புக் குழு மற்றும் கால்நடை மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் அப்பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்றனா். பின்னா் கால்நடை மருத்துவக் குழுவினா் வனத் துறையினரின் உதவியுடன் துப்பாக்கி மூலம் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினா்.
பின்னா் யானையைப் பின்தொடா்ந்து சென்று அது மயக்கமடைந்தவுடன் கயிற்றால் கட்டினா். தொடா்ந்து இந்த யானையை முதுமலை புலிகள் காப்பக முகாமுக்கு கொண்டுச் செல்ல வனத் துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.