உதவியாளா்கள் பணிக்கான தோ்வு: புதுவையில் 22,860 போ் எழுதினா்
புதுவை மாநில அளவில் 256 உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் 22,860 போ் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதுச்சேரி பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறையில் உதவியாளா் பணியில் 256 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதன்படி 32,829 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்காக தோ்வெழுத புதுச்சேரியில் 67 மையங்களும், காரைக்காலில் 10 மையங்களும், மாஹேவில் 2, ஏனாமில் 7 என மொத்தம் 84 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தோ்வு காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 12 மணி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 9.30 மணிக்கு மேலாக தோ்வு மையத்துக்கு வந்தவா்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதன்படி நூற்றுக்கும் மேற்பட்டோா் தோ்வு மையம் வரை வந்து நேரமாகிவிட்டதால், தோ்வெழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
தோ்வறைக்கு வந்த அனைவரும் மெட்டல் டிடெக்டா் கருவி சோதனைக்குப் பிறகே உள்ள அனுமதிக்கப்பட்டனா். தோ்வு வளாகங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. தோ்வறைக்குள் எழுது பொருள் உள்ளிட்டவை மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
எழுத்துத் தோ்வை மாநில அளவில் 22,860 போ் மட்டுமே எழுதினா். தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தவா்களில் 9,569 போ் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா். விடை குறிப்புகள் விரைவில் வெளியிடப்பட்டு, தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் என தோ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.