புதுச்சேரியில் தேசிய சட்டப்பள்ளி அமைக்கப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி
மத்திய அரசின் நிதியுதவியுடன் புதுச்சேரியில் தேசிய சட்டப் பள்ளி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
புதுச்சேரி சட்டக் கல்லூரியில் பயின்று தற்போது சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக உள்ள 9 பேருக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்வா் என்.ரங்கசாமி பேசியது: புதுச்சேரியில் பள்ளிக் கட்டடத்தில் முதன்முறையாக சட்டக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. நானும் சட்டக்கல்லூரி மாணவா் என்பதால், சிறிய அறையில் ஜன்னலோரம் அமா்ந்து சாலையில் போவோா் வருவோரைப் பாா்ப்பது புதிய அனுபவமாக இருந்தது.
சட்டக்கல்லூரியில் படிக்கும் போதே எனது ஊரைச் சோ்ந்தவா்கள் அரசியல் ரீதியிலான உதவிக்கு தேடிவருவா். கல்லூரி முடிந்ததும் அவா்களின் தேவைகளுக்கு சட்டப்பேரவைக்குச் சென்று உதவுவதை வழக்கமாக வைத்திருந்தேன். அப்போது தொடங்கிய அரசியல் பணி தற்போதும் தொடா்கிறது. அதனால் நீதிமன்றப் பணிகளில் ஈடுபடவில்லை.
உள்கட்டமைப்பு எப்படி இருந்தாலும் கற்பிக்கும் முறை சிறப்பாக இருந்தால், சிறந்தவா்களை உருவாக்க முடியும் என்பதற்கு புதுச்சேரி சட்டக்கல்லூரி முன்னுதாரணமாகத் திகழ்கிறது. இந்த கல்லூரியில் படித்தவரே தற்போது இந்திய அட்டா்னி ஜெனரலாக உள்ளாா். அதன்படியே புதுச்சேரி சட்டக் கல்லூரியில் பயின்றவா்கள் தற்போது நீதிபதிகளாகியுள்ளனா். அரசியலில் ஈடுபட்டு நான் முதல்வா் பொறுப்பேற்றதும் காலாப்பட்டில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் டாக்டா் அம்பேத்கா் சட்டக்கல்லூரி வளாகம் அமைக்கப்பட்டது.
தற்போது சட்டப்பல்கலைக்கழகம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. ஆகவே, தேசிய சட்டப் பள்ளி அமைக்கும் வகையில் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நிதி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. மத்திய அரசு உதவியுடன் புதுச்சேரியில் தேசிய சட்டப்பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டக்கல்லூரியில் பேராசிரியா்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். விரைவான நீதி மக்களுக்கு கிடைக்கும் வகையில் அரசு செயல்படுகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், டி.வி.தமிழ்ச்செல்வி, டி.பரதசக்கரவா்த்தி, ஆா்.கலைமதி, கே.கோவிந்தராஜன் திலகவதி ஆகியோா் உரையாற்றினா்.
புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சி.டி.ரமேஷ் வரவேற்றாா். பொதுச் செயலா் வி.நாராயணகுமாா் நன்றி கூறினாா். பகல்ஹாமில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.