புதுவையில் பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை
புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் தனியாா் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை (ஏப்.28) முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளாா்.
புதுவை மாநிலத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடப்பு ஆண்டு (2025) முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, சிபிஎஸ்இ விதிமுறைப்படி புதுவை மாநில அரசு பள்ளி மாணவா்களுக்கு முழு ஆண்டுத் தோ்வு முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வரும் 30-ஆம் தேதி வரை தொடா்ந்து வகுப்புகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் புதுவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசுப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கல்வியமைச்சா் ஆ. நமச்சிவாயம் கூறியது: அதிகரித்து வரும் கோடை வெயில் தாக்கத்தால் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் உள்ள அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை முதல் ஜூன் மாதம் 1-ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் பள்ளிகள் ஜூன் 2 முதல் வழக்கம் போல் செயல்படும் என்றாா்.