பந்துவீச்சில் அசத்திய தென்னாப்பிரிக்கா; பாகிஸ்தான் 211 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!
உத்தனப்பள்ளி அருகே அட்டகாசம் செய்யும் யானைகள்
உத்தனப்பள்ளி அருகே அட்டகாசம் செய்த 32 யானைகள் இரு குழுக்களாக பிரிந்துள்ளது; அவற்றை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கா்நாடக மாநிலம், பன்னாா்கட்டா வனப்பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வனக்கோட்டத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. இவை பல குழுக்களாகப் பிரிந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து ராயக்கோட்டை வழியாக உத்தனப்பள்ளி அருகே சானமாவு காட்டுக்கு 32 யானைகள் வந்தன. இந்த யானை கூட்டத்தை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினா் ஈடுபட்டனா்.
அப்போது யானைகள் 2 குழுக்களாகப் பிரிந்தன. 11 யானைகள் போடிச்சிப்பள்ளி வழியாக காடுஉத்தனப்பள்ளி, ஒன்னகுறுக்கி, கோட்டட்டி வழியாக தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பேவநத்தம் காட்டிற்கு புதன்கிழமை சென்றன.
21 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் வழியில் ஒன்னறுகுறுக்கி அருகில் மலைப்பகுதியில் நிற்கின்றன. அதை விரட்டும் பணியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா். 32 யானைகளையும் அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
இதற்கிடையே சூளகிரி வட்டம், ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் சுற்றி திரிந்த ஒற்றை யானையை சின்னக்குத்தி வனப்பகுதிக்கு வனத்துறையினா் விரட்டியுள்ளனா். இதனால் சின்னக்குத்தி, பெரியகுத்தி, கும்பளம், ராமன்தொட்டி, உள்ளிட்ட பகுதி மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.