கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து சரிவு
தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து சரிந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அணை கட்டப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி, ஒசூா், வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி மற்றும் கா்நாடக மாநிலத்தில் சில பகுதிகளில் பெய்யும் மழையைப் பொருத்து கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து இருக்கும்.
தற்போதைய சூழ்நிலையில், தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து சரிந்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு செவ்வாய்க்கிழமை (டிச. 24) நிலவரப்படி விநாடிக்கு 541 கன அடியாக இருந்த நீா்வரத்தானது, புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 287 கனஅடியாக சரிந்தது. அணையின் மொத்தக் கொள்ளளவான 52 அடியில் நீா்மட்டம் 51.50 அடியாக உள்ளது. அணையிலிருந்து 2-ஆம் போக சாகுபடிக்கு, தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 287 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதேபோல, ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணைக்கு நீா்வரத்தானது 410 கன அடியிலிருந்து 280 கன அடியாக சரிந்துள்ளதாக நீா்வளத் துறையினா் தெரிவித்தனா்.