Car: '35 ஆண்டுகள், 100 ஆடம்பர கார்கள்' - ரூ.8500 கோடி மதிப்புள்ள வீட்டை கார் மிய...
உத்தரகண்ட் மேகவெடிப்பு: 2 பேர் மாயம்! மீட்புப் பணியில் ராணுவம்!
உத்தரகண்டில் சமோலி மாவட்டத்தின் தாராலியில், மேகவெடிப்பால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க இந்திய ராணுவப் படைகள் களமிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமோலி மாவட்டத்தின் தாராலியில், நேற்று (ஆக.22) நள்ளிரவு ஏற்பட்ட மேகவெடிப்பால் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இதனால், அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டமைப்புகளினுள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வாகனங்கள் மற்றும் இடிபாடுகள் முழுவதும் நிரப்பியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, தாராலியை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் இடிபாடுகள் சூழ்ந்துள்ளதால், அங்கு மீட்புப் படைகள் செல்வதற்கு தாமதமாவதாகக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, தற்போது அங்கு மாநில, தேசிய மீட்புப் படைகள் முடக்கங்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 20 வயதுடைய பெண் ஒருவர் மற்றும் ஒரு முதியவர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் மோப்ப நாய்களின் உதவியுடன் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய வானிலை ஆய்வு மையம், உத்தரகண்டின் டெஹ்ராடூன், தெஹ்ரி, பௌரி கார்வால், உத்தரகாசி, சமோலி, ருத்ராபிரயாக், நைனிடல், அல்மோரா மற்றும் உத்தம் சிங் நகர், ரிஷிகேஷ் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வங்கி மோசடி: அனில் அம்பானி மீது வழக்குப் பதிவு! சிபிஐ சோதனை