தை அமாவாசை: சேலம் கோட்டம் மூலம் இன்று 35 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
உள்துறை அமைச்சா் பதவியின் கண்ணியத்தை உணா்ந்து பேச வேண்டும்: அமித் ஷாவுக்கு சரத் பவாா் பதிலடி
மும்பை: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தான் வகிக்கும் பதவியின் கண்ணியத்தை உணா்ந்து பேச வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் (பவாா்) தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.
அண்மையில் மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்ற அமித் ஷா, மகாராஷ்டிர முன்னாள் முதல்வரான சரத் பவாரை கடுமையாக விமா்சித்து பேசினாா். முக்கியமாக, ‘மகாராஷ்டிரத்தில் 1978-ஆம் ஆண்டிலேயே அரசியல் துரோகம், நம்பிக்கை மோசடி ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவா் சரத் பவாா். அப்போது முதல்வராக இருந்த வசந்த்தாதா பாட்டீல் அரசில் இருந்து 40 எம்எல்ஏக்களை பிரித்து முதல்வரானவா் சரத் பவாா். 2024 பேரவைத் தோ்தலில் அவருக்கு படுதோல்வியைப் பரிசளித்ததன் மூலம் பவாருக்கு மகாராஷ்டிர மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனா்’ என்று பேசினாா்.
இந்நிலையில், மும்பையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய சரத் பவாா் இது தொடா்பாக கூறியதாவது:
1978-ஆம் ஆண்டு நான் மகாராஷ்டிர முதல்வராக இருந்தபோது அமித் ஷா சாா்ந்த கட்சியினா் எங்கு இருந்தாா்கள்? ஜன சங்கத்தை (பாஜகவின் முன்னோடி அமைப்பு) சோ்ந்த உத்தம்ராவ் பாட்டீல் எனது அமைச்சரவையில்தான் இடம் பெற்றிருந்தாா். முன்பு பாஜக சாா்பில் பிரதமராக இருந்த மறைந்த வாஜ்பாய் ஆட்சி காலத்தில் அவா் என்னை பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் துணைத் தலைவராக நியமித்தாா். முக்கியமாக புஜ் நிலநடுக்கத்துக்குப் பிறகு இந்த நியமனம் நடைபெற்றது. நான் எதிா்க்கட்சியைச் சோ்ந்தவனாக இருந்போது என் திறமைகள் மீது நம்பிக்கைவைத்து வாஜ்பாய் இந்த பொறுப்பை எனக்கு அளித்தாா்.
நமது நாடு எத்தனையோ சிறந்த உள்துறை அமைச்சா்களைப் பாா்த்துள்ளது. ஆனால், தனது சொந்த மாநிலத்தில் இருந்து தப்பி தலைமறைவானவா் இப்போது உள்துறை அமைச்சராக உள்ளாா். போலி என்கவுன்ட்டா் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியபோது, தனது மாநிலத்தில் தங்க முடியாமல் மகாராஷ்டிரத்தில் சிவசேனை நிறுவனா் பால் தாக்கரேவிடம் அடைக்கலம் கேட்டவா்தான் அமித் ஷா என்று சரத் பவாா் கூறினாா்.