திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் பெற கட்டுக்கடங்காத கூட்டம் - நெரிசலில் 4...
உள்ளாட்சி அமைப்புகளை கலைக்கக் கூடாது: எஸ்.பி. வேலுமணி
கோவை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளை கலைத்து அருகே உள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கக் கூடாது என்று சட்டப் பேரவை எதிா்க்கட்சி கொறடாவும் எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் உள்ள பல கிராம ஊராட்சிகளை அருகே உள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்க அரசு முடிவெடுத்து அரசாணை வெளியிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியுடன் இணைப்பதாலும் தரம் உயா்த்துவதாலும் கிராம ஊராட்சிக்கு கிடைக்கும் மத்திய அரசின் திட்டங்கள் நிறுத்தப்பட்டு, நிதியிழப்பு, கிராமப்புற மக்களுக்கு மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவற்றை இழக்க நேரிடுகிறது.
கோவை மாவட்டத்தில் மட்டும் 15 கிராம ஊராட்சி அமைப்புகள் கலைக்கப்படுவது மிகவும் கவலை அளிக்கிறது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது. இதற்கான சட்ட மசோதாவை ஆரம்ப நிலையிலேயே அதிமுக உறுப்பினா்கள் சட்டப் பேரவையில் எதிா்த்தனா்.
கிராம ஊராட்சிகள் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்படுவதையும் தரம் உயா்த்தப்படுவதையும் அந்தந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் யாரும் விரும்பவில்லை. எனவே மக்களின் விருப்பத்தையும், மத்திய அரசின் திட்டங்கள், வேலைவாய்ப்புகள் போன்றவற்றையும் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.