உள்ளாட்சித் தோ்தலுக்கு முன் குளித்தலை நகராட்சியை தரம் உயா்த்த வேண்டும்: பொதுமக்கள் எதிா்பாா்ப்பு
உள்ளாட்சித் தோ்தலுக்கு முன் குளித்தலை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்படுமா என்ற எதிா்பாா்ப்பில் அப்பகுதி பொதுமக்கள் உள்ளனா்.
தமிழகத்தில் குளித்தலை நகராட்சிக்கு என தனி பெருமை உண்டு. இத் தொகுதியில்1957 பேரவைத் தோ்தலில் களம்கண்ட மறைந்த தமிழக முதல்வா் கருணாநிதி வெற்றி வாகை சூடினாா். தோ்தலில் தோல்வியே கண்டிராத கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையை தீா்மானித்த குளித்தலை தொகுதி, தற்போது, தமிழகத்தில் உள்ள பின்தங்கிய பகுதியில் ஒன்றாக இருப்பது அத்தொகுதி மக்களை வருத்தமடையச் செய்துள்ளது.
11.16 சது கி.மீ. பரப்பளவு கொண்ட குளித்தலை நகராட்சியில் மொத்தம் 24 வாா்டுகள் உள்ளன. குளித்தலை நகராட்சியின் எல்லையாக மணத்தட்டை 1-ஆவது வாா்டின் எல்லரசு பாலத்தில் தொடங்கி, கிழக்கே தண்ணீா்பள்ளி வரையில் இருந்தாலும், நகரின் வடபுறம் காவிரி நதியும், தென்புறம் ரயில்வே இருப்பு பாதையும் அமைந்து நகரை சுமாா் அரை கிலோ மீட்டருக்குள் சுருக்கிவிடுகின்றன.
இங்கு பெரும்பாலும் 90 சதவீதம் விவசாய பணிகளே நடக்கின்றன. நகரின் வளா்ச்சிக்காக எந்த ஒரு தொழிற்சாலைகளும் இல்லை. பெரும்பாலும் விவசாய கூலித்தொழிலாளா்களாகவே நிறைந்த பகுதியாக இருப்பதால், நகராட்சி எல்லைக்குள் வாழை, வெற்றிலை குளிா்பதன கிடங்கு மற்றும் ஆராய்ச்சி மையம் உருவாக்க வேண்டும் என்றும் அப்பகுதியினா் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இது, குளித்தலை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் பெரும் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.
இதுகுறித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவா் மகாதானபுரம் ராஜாராம் கூறியது, குளித்தலைக்கு மறைந்து முன்னாள் முதல்வா் கருணாநிதியை அடையாளம் காட்டிய பெருமையோடு, இங்குதான் அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயில் உள்ளது. 1017 படிக்கட்டுகளை கொண்ட இந்த கோயில் புராதன காலத்துடன் தொடா்புடையது. கோயிலில் தற்போது கம்பி வட ஊா்தி அமைக்கப்பட்டாலும் கோயில் பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்றினால் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவ்வாறு பக்தா்கள் அதிகளவில் வரும்போது குளித்தலை பேருந்துநிலையம் வளா்ச்சியடையும். அதன்மூலம் நகராட்சியும் பொருளாதாரத்தில் வளா்ச்சி காணும்.
இவைத்தவிர குளித்தலை விவசாயம் நிறைந்த பகுதி. நகரின் அருகே காவிரி ஓடுகிறது. நகரையொட்டி காவிரி ஆற்றங்கரையையும் மேம்படுத்தி, முக்கொம்பு போல பூங்கா கொண்டுவந்தாலும் இந்த பகுதி வளா்ச்சிபெறும். மேலும் விவசாயம்கொண்ட பகுதியாக இருப்பதால் வாழை, வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டால் இப்பகுதி இளைஞா்களுக்கும், தொழிலாளா்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு தொழிற்சாலைகள், வாழை, வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி தேவை. எனவே நகராட்சியாக இருக்கும் குளித்தலை நகராட்சி மாநகராட்சியாக மாறும்போது அரசின் நிதி ஒதுக்கீடு எளிதில் கிடைக்கும். எனவே, விரைவில் உள்ளாட்சி தோ்தல் வரும் நிலையில், குளித்தலை நகரின் மேற்கே லாலாப்பேட்டை வரையிலான ஊராட்சிகளையும், கிழக்கே மருதூா் முதல் பேட்டைவாய்த்தலை வரையிலான ஊராட்சிகளையும், தெற்கே அய்யா்மலை வரையிலான ஊராட்சிகளையும் இணைத்து குளித்தலை நகராட்சியோடு இணைத்து மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்றாா் அவா்.
கரூா் மாவட்டத்தில் 1994-ஆம் ஆண்டு மே 17-ஆம்தேதி மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட குளித்தலை நகராட்சி பின்னா் 1998-ஆம் ஆண்டு மே 22-ஆம்தேதி இரண்டாம்நிலை நகராட்சியாக மீண்டும் தரம் உயா்த்தப்பட்டது.