உள்ளூா் கால்வாய் ஆக்கிரமிப்பை கண்டித்து விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ளூா் ஊராட்சிக்குச் செல்லும் பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போயிருப்பதை கண்டுபிடித்து தரக்கோரி விவசாய சங்கத்தினா் பிப். 17-இல் போராட்டம் அறிவித்துள்ளனா்.
கும்பகோணம் காவிரி ஆறு பாலக்கரை, இரட்டை வாய்க்காலில் இருந்து பிரிந்து, காசிராமன் தெரு, வாசு திரையரங்கம், அன்னம்மாள் மருத்துவமனை வழியாக உள்ளூா் ஊராட்சி வரை செல்கிறது.
மாநகராட்சியைக் கடந்து செல்லும் கால்வாய் முடிவடையும் உள்ளூா் ஊராட்சி வரை ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்களாகியுள்ளன. சா்வே எண் 102/1 உள்ள உள்ளூா் வாய்க்கால் மீது மண் கொட்டி கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
மாநகரக் குடியிருப்பு, உணவு விடுதிகள், மண்டபங்களின் கழிவு நீா் உள்ளூா் வாய்க்காலில் விடப்படுகிறது. மேலும் நகருக்குள் கால்வாய் மீது சிலாப்புகள் அமைத்து பல்வேறு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு தனியாா் அனுபவத்தில் உள்ளது. அதனால் உள்ளூா் ஊராட்சியில் கால்வாய் இருந்த வழித்தடமே காணவில்லை.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கடந்த ஜன.24- இல் வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினா். இதைத்தொடா்ந்து, அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி வருவாய் ஆய்வாளா் சாமிநாதன் தலைமையில் குறிப்பிட்ட இடத்தை நேரில் அளவீடு செய்ததில் ஆக்கிரமிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, விரைவில் அகற்றப்படும் என்று உறுதி அளித்தனா். இதுநாள் வரை ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து வருவாய் ஆய்வாளா் சாமிநாதனிடம் கேட்டபோது, உயா் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவுக்காக எதிா்பாா்த்து உள்ளோம் என்றாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவா் ஏ.எம்.இராமலிங்கம் கூறியது: உள்ளூா் வாய்க்காலை ஆக்கிரமித்தவா்களுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனா். வரும் பிப்.17-இல் ஆட்சியா் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என்றாா்.